பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான BIMSTEC பணிக்குழுவின் [Eighth BIMSTEC Task Force on Traditional Medicine – BTFTM] எட்டாவது கூட்டம், இலங்கையின் ஆதரவுடன் 2026 ஒக்டோபர் 06ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் இணையவழி மூலம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிம்ஸ்டெக் செயலகத்தின் பிரதிநிதிகளும், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் நிகழ்நிலை முறையில் பங்கேற்றனர். அத்துடன், இலங்கையின் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு மற்றும் ஆயுள்வேதத் திணைக்களத்தின் அதிகாரிகளும் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.
BIMSTEC பிராந்தியத்தில் பாரம்பரிய மருத்துவத் துறையை அபிவிருத்தி செய்வதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ள செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதும், எதிர்காலச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடுவதுமே இக்கூட்டத்தின் பிரதான நோக்கமாக இருந்தது.
அதற்கமைய, பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பான அறிவைப் பகிர்ந்துகொள்ளுதல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்களை ஊக்குவித்தல், உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட பல விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட முக்கிய விடயங்களில், பிராந்திய ரீதியாகப் பாரம்பரிய மருத்துவத் துறை தொடர்பான தகவல்களையும் அறிவையும் பகிர்ந்துகொள்வதற்கான பிம்ஸ்டெக் பாரம்பரிய மருத்துவ இணையவாயிலை (BIMSTEC Traditional Medicine Portal) அபிவிருத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல்; பாரம்பரிய மருத்துவ விஞ்ஞானம், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி தொடர்பாக முன்மொழியப்பட்டுள்ள பிம்ஸ்டெக் சிறப்புமிகு மையம் குறித்துக் கலந்துரையாடுதல்; இரண்டாவது பிம்ஸ்டெக் நோடல் குழுக் கூட்டத்தின் அறிக்கையையும் சுருக்கத்தையும் பரிசீலித்தல்; மற்றும் பாரம்பரிய மருத்துவ அறிவு (Traditional Medicine Knowledge – TMK), மரபணு வளங்கள் (Genetic Resources – GR) மற்றும் அறிவுசார் சொத்துரிமைகள் (Intellectual Property Rights – IPR) தொடர்பாக நடைபெற்ற மூன்றாம் மாநாட்டின் அறிக்கையையும் சுருக்கத்தையும் பரிசீலித்தல் ஆகியன அடங்கும்.


